Friday, April 5, 2013

சவூதி அரேபியாவில் தங்களது நாட்டினருக்கு ஒரு சட்டம், அடுத்த நாட்டினவருக்கு ஒரு சட்டமா?



சவூதி அரசாங்கம் தங்களது நாட்டினருக்கு சலுகை வழங்கி அங்கு வேலை செய்ய
வரும் பிறநாட்டினரையும், பிற மதத்தினரையும் துன்புறுத்தி கொடுமைப்படுத்தி
வருகின்றது என்று பல அவதூறு செய்திகளை நம் நாட்டு ஊடகங்கள் பரப்பி வருவது
நாம் அனைவரும் அறிந்ததே!
இலங்கைப் பெண் ரிசானா 4மாத குழந்தையை கழுத்து நெறித்துக் கொலை செய்த
வழக்கில் சவூதி அரசாங்கம் அப்பாவி(?) ரிசானாவை தூக்கிலிட்டது. அதே
நேரத்தில் தனது மகளையே கொன்ற அல்காம்தி என்ற சவூதி நாட்டைச்
சேர்ந்தவருக்கு 4மாதமே சிறைதண்டனை வழங்கி மன்னித்துவிட்டுவிட்டது என்று
நாக்கூசாமல் பொய்யைப் பரப்பினர். இந்த விஷயத்தில் இவர்களது
பித்தலாட்டங்களை ஏற்கனவே உணர்வு இதழ் தோலுரித்துக்காட்டியது. உணர்வின்
வாதங்களுக்கு எவருமே பதில் சொல்லவில்லை
சவூதியில் தங்களது நாட்டினருக்கு ஒரு சட்டம், அடுத்த நாட்டினவருக்கு ஒரு
சட்டம் என்று அநியாயமான சட்டம் உள்ளது என புளுகித்தள்ளினர். ஆனால்
இதுபோன்ற அவதூறுகளையெல்லாம் தகர்த்து தவிடு பொடியாக்கி வரும் நிகழ்வுகள்
அன்றாடம் சவூதி அரேபியாவில் நடந்து வருகின்றன. அப்படிப்பட்ட ஒரு
நிகழ்வுதான் சென்ற இரு வாரத்திற்கு முன் நடந்துள்ளது. அது குறித்த
செய்தியைக் காண்போம்......
இந்திய நாட்டு இந்து சகோதரரை ஏமாற்றிய சவூதி முதலாளி:
களமிறங்கிய தபூக் டிஎன்டிஜே!.....

கடந்த 01-03-2013 அன்று தஞ்சை மாவட்டம் அய்யம்பேட்டையைச் சேர்ந்த பிறமத
சகோதரர் முத்துசாமி  என்பவர் தபூக் கிளை நிர்வாகிகளை அணுகி, தனது முதலாளி
தனக்கு 3 மாதம் சம்பளம் தராமல் தன்னை கொடுமைப்படுத்தியும், அடித்துத்
துன்புறுத்தியும் வந்தார்.  அதனால் தனது காதின் சவ்வு கிழிந்து
கஷ்டப்படுவதாகவும், தனக்கு நியாயம் பெற்றுத்தருமாறும் கண்ணீரோடு
கேட்டுக்கொண்டார்.
உடனடியாக களமிறங்கிய டிஎன்டிஜே!:
இந்தப் புகாரை நமது நிர்வாகிகளிடம் தெரிவித்தவுடன் கிளைத் தலைவர் சகோ.
அப்துல் அஜீஸ் அவர்கள் அந்தச் சகோதரரின் விபரத்தை இந்தியத் துணை
தூதரகத்திற்கு அறிவித்துவிட்டு, தபூக்கில் உள்ள காவல் நிலையத்திற்குச்
சென்று சம்பந்தபட்டவரின் முதலாளி மீது வழக்குப் பதிவு செய்தார்.  உடன்
காவல்துறையினர் அந்த முதலாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.  அத்தோடு
நில்லாமல் அவரை அழைத்துச்சென்று தபூக் நீதிமன்றத்தில் வழக்கும் பதிவு
செய்தனர்.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிமன்றம், அந்த முதலாளிக்கு,
முத்துசாமியின் 3 மாத சம்பளம் 3000 ரியால், இழப்பீடு 1500 ரியால், விமான
டிக்கெட்டிற்கு 1500 ரியால் என 6000 ரியால் வழங்கும்படி உத்தரவிட்டது.
(ஒரு ரியால் என்பது சுமார் 15 ரூபாய் ஆகும். இந்தியப் பண மதிப்பிற்கு இது
90,000 தொன்னூறாயிரம் ரூபாய்). அதனைப் பெற்ற டிஎன்டிஜே தபூக் கிளைத்
தலைவர் சகோ. அஜீஸ் அவர்கள் அந்தப்பணத்தை முத்துசாமியிடம் ஒப்படைத்தார்.
அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15.03.2013 வெள்ளி அன்று அவரை நமது
நிர்வாகிகள் தாயகத்திற்கு அனுப்பி வைத்தனர். அவர் கண்ணீருடன் நமது
நிர்வாகிகளுக்கு நன்றி செலுத்தி தாயகம் திரும்பினார்.
நமது ஜமாஅத் மத இன வேறுபாடு இல்லாமல் அனைத்து தரப்பினருக்கும் உரிமையைப்
பெற்றுத்தர பாடுபடுவைதை இது பறை சாற்றுவதுடன், அரபு நாட்டில் அந்நிய
நாட்டினருக்கு நியாயம் கிடைப்பதில்லை என்ற வாதத்தை இந்நிகழ்வு
தவிடுபொடியாக்குகிறது.
குற்றம் செய்தவர் தன் நாட்டினரானாலும் உடனே அவரை கைது செய்த
காவல்துறையும், இழப்பீடு வழங்கச் சொன்ன நீதித்துறையும் சட்டத்தைத்தான்
பார்க்கிறதே தவிர, பிறநாடுகளைப்போல் அறிந்தவர் அறியாதவர் என்று
பார்ப்பதில்லை என்பது மீண்டும் ஊர்ஜிதமாகிறது. அல்ஹம்துலில்லாஹ்.
இதே நேரத்தில் இதுபோன்ற ஒரு வழக்கு இந்தியாவில் தொடுக்கப்பட்டால் நிலைமை
என்ன என்பதையும் நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். அந்த வழக்கில்
தீர்ப்புச் சொல்ல குறைந்தது 20 வருடங்களாவது ஆகிவிடும். முத்துசாமிக்கு
நியாயம் கிடைத்து அந்தப்பணம் தொன்னூறாயிரம் கையில் கிடைப்பதற்குள் அவர்
குறைந்தது சில லட்சங்களாவது வழக்கு செலவிற்காக செலவிட வேண்டியது வரும்.
அவ்வளவு பணம் செலவழித்தாலும் தீர்ப்பு அவருக்கு சாதகமாக வருமா என்பதும்
கேள்விக்குறிதான்.
எதிராளியிடம் பணத்தை வாங்கிக்கொண்டு காவல்துறையும், நீதித்துறையும் தனது
இஷ்ட்டத்திற்கு சட்டத்தை வளைத்திருக்கும். இந்த நாட்டில் இதுதான்
நடந்திருக்கும் என்பதில் சிறிதும் சந்தேகமில்லை.
ஆனால் சவூதியிலோ துரிதமாக செயல்பட்ட நீதிமன்றம் நியாயமான முறையில்
தீர்ப்பு வழங்கியுள்ளது. இதுபோன்ற செய்திகளை நம் ஊர் ஊடகங்கள்
வெளியிடுவார்களா? நிச்சயம் வெளியிடமாட்டார்கள். இந்நிலையை ஊடகங்கள்
மாற்றிக் கொள்ள வேண்டும். அப்போதுதான் இந்த நாடு உருப்படும்.
சவூதி அரேபியாவில் இந்த அளவிற்கு நீதியான முறையில் தீர்ப்பு
வழங்கப்பட்டு வரும் நிலையில் இங்குள்ள ஊடகங்கள் எந்த அளவிற்கு
விஷக்கருத்தை பரப்புகின்றார்கள் என்பதற்கு சமீபத்தில் ஊடகங்கள் வெளியிட்ட
ஒரு செய்தியை உதாரணமாகக் கூறலாம்.
அந்த செய்தி இதோ :
·         பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த குற்றவாளியின், மரண தண்டனையை
ரத்து செய்ய, ஆறு கோடி ரூபாய் அளிக்கும்படி, சவுதி அரேபிய அரசு நிபந்தனை”
என்றும், “மரண தண்டனையை ரத்து செய்ய ரூ.6 கோடி கேட்கும் சவுதி அரசு”
என்றும் விஷ்மத்தனமாக தலைப்பிட்டு செய்தி வெளியிடுகின்றார்கள்.
·         அந்தச் செய்தியில், “பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்
ஜோஸ்லிட்டோ சபன்டா. சூடான் நாட்டைச் சேர்ந்த நிலசுவான்தாரரை, 2009ம்
ஆண்டில், தகராறின்போது, கொன்று விட்டார். சபன்டாவின் தலையைத் துண்டித்து,
மரண தண்டனை நிறைவேற்றும் படி, கோர்ட் தீர்ப்பு கூறியது.
·         பிலிப்பைன்ஸ் அதிபர், பெனிக்னோ அகினோவின் வேண்டுகோளின் படி,
சவுதி அரசு, சபன்டாவின் மரண தண்டனையை நிறுத்தி வைத்தது. கொலையானவரின்
குடும்பத்தாருக்கு, ஆறு கோடி ரூபாய் அளிக்க வேண்டும், என்ற நிபந்தனை
விதிக்கப்பட்டது;
·         நான்கு மாத காலம், சவுதி அரசு இந்த தொகையை ஒப்படைக்க அவகாசம்
அளித்துள்ளது.
·         மேற்கண்ட செய்தியை படிப்பவர்களது உள்ளத்தில் என்ன சிந்தனை
எழும்? ரிசானா என்ற அப்பாவி(?) பெண்ணை மன்னித்து விடச் சொல்லி இலங்கை
அதிபர் உட்பட அனைவரும் கெஞ்சிய போது மனம் இரங்காத சவூதி அரசாங்கம்
பிலிப்பைன்ஸ் நாட்டினருக்கு மன்னிப்பு அளித்து பணம் கேட்கின்றதே! இது
எவ்வளவு பெரிய அநியாயம் என்ற எண்ணம் எழுமா இல்லையா?
·         ஆனால் இந்த சம்பவத்தின் உண்மை நிலவரம் என்ன?
·         கொலை செய்தவரை மன்னித்துவிடும் அதிகாரம் சவூதி மன்னருக்கு உள்ளதா?
·         அவர் நினைத்த தொகையை பெற்றுக் கொண்டு யாரை வேண்டுமானாலும்
மன்னித்து விடலாமா?
·         பாதிக்கப்பட்டவரின் குடும்பத்தினர் என்ன சொல்கின்றார்கள்?
என்ற நமது உள்ளத்தில் எழும் கேள்விகளுக்கெல்லாம் இந்த சம்பவம் குறித்து
அரபு நாட்டு ஊடகங்கள் முழுமையாக வெளியிட்ட செய்திகளில் நமக்கு உண்மை
தெரியவருகின்றது.
அதாவது, நடந்த சம்பவம் என்னவென்றால், ஜோசலிட்டோ சபன்டா என்ற
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சவூதியில் கட்டடப் பணி புரிந்த நபர்,
தற்போது சவூதியின் ஹெயில் நகரில் உள்ள சிறையில் உள்ளார். கடந்த 2009ஆம்
ஆண்டு சூடான் நாட்டைச் சேர்ந்த சாலே இமாம் இப்ராஹிம் என்பவரை வீட்டு
வாடகை குறித்த பிரச்சனையில் சுத்தியலால் அடித்து கொலை செய்தார்.
2012 நவம்பர் 14 – அன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டிய தேதியாக
நிர்ணயிக்கப்பட்ட நிலையில், கொல்லப்பட்ட சூடானியின் குடும்பத்தினர்,
சவூதி அரசின் வேண்டுகோளை ஏற்று, கொலை செய்தவருக்கு மன்னிப்பளிக்கின்றோம்
என்று சொல்லி, கொலைக்கு ஈடாக 50 இலட்சம்  சவூதி  ரியால்களை நஷ்ட ஈட்டுத்
தொகையாக கேட்டுள்ளனர். அதாவது இந்திய மதிப்பிற்கு ரூபாய் ஏழரை கோடி. இது
அதிகமாக உள்ளது என்று சவூதி அரசர் பாதிக்கப்பட்டவர்களது
குடும்பத்தினரிடம் கோரிக்கை வைக்க தாங்கள் கேட்ட 50 லட்சம்
ரியாலிலிருந்து இறங்கி வந்து, 40 இலட்சம் சவூதி ரியாலாக இழப்பீட்டுத்
தொகையை குறைத்துக் கொண்டனர். அதாவது இந்தியப் பணம் ரூபாய் 6கோடி மட்டும்.
·         சவூதி மன்னர் அப்துல்லாஹ் அவர்களும், இழப்பீட்டுத் தொகையை
திரட்ட மேலும் 4 மாதங்கள் கால அவகாசம் கொடுக்க உத்தரவிட்டார். ஆகையால்,
இவருக்கு இன்னும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வில்லை.
·         பிலிப்பைன்ஸ் அரசாங்கமும், பல பிலிப்பைன்ஸ் சமூக அமைப்புகளும்,
கொலைக்குற்றவாளியும் அரசர் அப்துல்லாஹ்விற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
·         பிலிப்பைன்ஸ் துணை ஜனாதிபதி ஜெஜோமர் பினாய் அவர்கள் இதற்கான
நிதி திரட்டுதலில் ஈடுபட்டுள்ளார்.
·         நஷ்ட ஈட்டுத்தொகையை ஒப்படைக்க இவருக்கு வழங்கப்பட்ட  காலக்கெடு
மார்ச் 12- 2013. அவகாசம் கொடுத்த தேதிக்குள் அவர்களால் பணத்தைத் திரட்ட
இயலவில்லை. எனவே அவர்கள் வைத்த கோரிக்கையை ஏற்று பாதிக்கப்பட்ட
குடும்பத்தினரின் அனுமதியுடன் இந்தக் காலக்கெடுவை ஜூன் 8ஆம் தேதி வரை
தள்ளி வைத்து சவூதி அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.
இதுதான் உண்மைச் செய்தி. உண்மை நிலை இப்படி இருக்கும்போது தங்களது
இஷ்ட்டத்திற்கு சவூதி அரசு நினைத்தவரை தண்டிக்கின்றது; நினைத்தவரை
மன்னிக்கின்றது என்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக இவர்கள் விஷம்
கலந்து விஷயத்தை விளக்குகின்றார்கள் என்றால் இவர்களது நீதி நேர்மையை
என்னவென்பது?
இதுபோன்றுதான் முஸ்லிம்களுக்கு எதிராக திட்டமிட்டு அவதூறுகளை பரப்பி வருகின்றனர்.
இந்தச் செய்தியை எந்த ஊடகமாவது வெளியிட்டார்களா?
ரிசானா விவகாரத்தில் சவூதி அரேபிய அரசாங்கம் தவறான தீர்ப்பு சொன்னதாக
குய்யோ முறையோ என்று கத்திய ஊடகங்கள் அநியாயமான முறையிலும்,
அடாவடித்தனமாகவும் முஸ்லிம்கள் மீது அவதூறுகளை அள்ளி வீசின.
அதே நேரத்தில் சவூதியில் நடந்த மற்றுமொரு கொலை வழக்கு சம்பந்தமாக சவூதி
நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக் குறித்து நமது ஊர் ஊடகங்கள் மூச்சுக் கூட
விடவில்லை.
இதோ அந்த செய்தி :
சவூதியில் பணிபுரியும் இந்தோனேஷியா நாட்டைச் சேர்ந்த பெண் வீட்டு
வேலையாள் ஒருவர், தான் வேலை செய்யும் வீட்டில் மிஷாரி என்ற 3 மாத சவூதி
குழந்தையை விஷம் வைத்துக் கொன்றதாகத் தொடரப்பட்ட வழக்கில் இருந்து,
தம்மாம் பொது நீதிமன்றத்தால் கடந்த 12.02.2013 அன்று விடுதலை
செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் இறந்த பிறகான மருத்துவ அறிக்கையும், இறப்பதற்கு முன்பான
குழந்தையின் மருத்துவ அறிக்கையும், குழந்தை விஷம் கொடுக்கப்பட்டு
இறக்கவில்லை என நிரூபிப்பதாக நீதிமன்றம் அறிவித்தது. குழந்தைக்கு இருந்த
ஒரு வகையான மரபணு நோயே இறப்பிற்கு காரணம் என நீதி மன்றம் கூறியது.
இத்தீர்ப்பின் போது, குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் வழக்குரைஞர்,
குழந்தையின் தந்தை மற்றும் இந்தோனேஷியா தூதரக மற்றும் மனித உரிமை ஆணையப்
பிரதிநிதிகள் உடனிருந்தனர்.
அதாவது சவூதியைச் சேர்ந்த ஒரு குழந்தை இறந்துவிடுகின்றது.
இந்தோனேஷியாவைச் சேர்ந்த வீட்டு வேலைக்கு வந்த பெண்மணிதான் அந்தக்
குழந்தையை கொலை செய்தார் என்று வழக்குத் தொடுக்கப்படுகின்றது.
சவூதி நீதிமன்றம் இறந்த குழந்தை சவூதி நாட்டுக் குழந்தையா அல்லது
இந்தோனேஷியக் குழந்தையா என்று பார்க்கவில்லை. குழந்தையின் மரணம் கொலையா
என்பதை மட்டும்தான் ஆய்வு செய்துள்ளது. குழந்தைக்கு இருந்த மரபணு
நோய்தான் அந்தக் குழந்தை இறப்பதற்குக் காரணம் என்ற உண்மையை மருத்துவச்
சான்றிதழ்கள் மூலம் உறுதி செய்து குற்றம்சாட்டப்பட்ட இந்தோனேஷியப்
பெண்மணியை விடுதலை செய்துள்ளது தம்மாம் நீதிமன்றம். இந்தச் செய்தி
குறித்து எந்த ஊடகமும் மூச்சு கூட விடவில்லை. இதை எழுதினால் சவூதி
அரசாங்கம் நீதியான முறையில் தீர்ப்பு வழங்குகின்றது என்ற உண்மை உலகுக்கு
தெரிந்துவிடும் என்பதால்தான் அயோக்கிய ஊடகங்கள் திட்டமிட்டு இதுபோன்ற
செய்திகளை மூடி மறைத்துவிட்டன. முஸ்லிம்கள் விஷயத்தில் இவர்கள்
கட்டிக்காத்து வரும் நீதி இதுதான்.

நன்றி: TNTJ.NET http://www.tntj.net/141754.html

No comments: